குவைத்:
குவைத்தில் 8 லட்சம் இந்தியர்கள் வரையில் வேலை இழக்கலாம், அரசின் குடியேற்ற ஒதுக்கீடு வரைவு மசோதாவுக்கு ஒப்புதல்
குவைத் அரசு வெளிநாடு வாழ் மக்கள் எண்ணி்க்கையை குறைக்கும் குடியேற்ற ஒதுக்கீடு வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளதால், அந்நாட்டில் வாழும் இந்தியர்களில் 8 லட்சம் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழலை எதிர்கொண்டுள்ளனர். வளைகுடா நாடான குவைத்தில் 30 லட்சம் வெளிநாட்டினர் வசிக்கும் நிலையில் அதில் 11.5 லட்சம் அளவுக்கு இந்தியர்கள் வசிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு, கரோனா வைரஸ் பாதிப்பு போன்றவற்றால் ஏராளமான வெளிநாட்டவர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கிருக்கும் நிறுவனங்களும் பெரும் சிக்கலில் இருக்கின்றன.
இதுமட்டுமல்லாமல், குவைத்தில் வெளிநாட்டினருக்கு எதிரான மனநிலை அங்குள்ள அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால், வெளிநாட்டினர் எண்ணிக்கையை குறைக்கும் முடிவில் இறங்கியுள்ளார்கள் என்ற தகவல்களும் தெரிவிக்கின்றன
சமீபத்தில் குவைத் நாட்டு பிரதமர், ஷேக் ஷபாப் அல் காலித் அல் ஷபாப் கூறுகையில் " எங்கள் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் மக்கள் தொகையை 70 சதவீதத்திலுருந்து 30 சதவீதமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, வெளிநாட்டினர் மக்கள் தொகையை குறைக்கும் வகையில் குடியேற்ற ஒதுக்கீடு வரைவு மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாவுக்கு குவைத்தின் தேசிய நடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாவின்படி குவைத்தில் 15 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே வசிக்க வகை செய்யும். இந்த மசோதா இனிமேல் உயர்மட்டக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.இந்த மசோதாவின்படி தற்போது குவைத்தில் உள்ள 11.5 லட்சம் இந்தியர்களில் 8 லட்சம் பேர் தாயகம் திரும்பவேண்டிய கட்டாயத்துக்குள்ளாவார்கள். இந்த மசோதா குறித்து குவைத்தில் உள்ள இந்தியத்தூதரகம் தரப்பில் எந்தவிதமான கருத்தும் இல்லை. ஆனால், இந்த விவகாரத்தை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தெரிகிறது

No comments:
Post a Comment