Breaking

Wednesday, 15 July 2020

Corona Virus kanyakumari - குளச்சலில் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் உள்பட 11 பேருக்கு கொரோனா பாதிப்பு


குளச்சல்:

குளச்சல் சுற்றுவட்டார பகுதிக்குள் புகுந்த கொரோனா, படிப்படியாக அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான மக்களை பாதிப்படைய செய்தது. தற்போது குளச்சல் நகராட்சியை மையமாக வைத்து தொற்று அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் குளச்சல் நகராட்சி மார்க்கெட் கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் என 115 பேருக்கு கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 9 கடைக்காரர்களுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களை சுகாதாரத்துறையினர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி தனிமை வார்டில் சேர்த்தனர்.

பின்னர் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அதே சமயத்தில், கொரோனா பரிசோதனை முகாம் நகராட்சி சார்பில் ஒரு ஓட்டல் முன்பு நடத்தப்பட்டது. குளச்சல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவர் சந்தோசம் தலைமையிலான மருத்துவக்குழுவினர் 74 பேரிடம் சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த பரிசோதனை நேற்றுமுன்தினம் வெளியானது. இதில் குளச்சலில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 11 பேரையும் சுகாதாரத்துறையினர், ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி தனிமை வார்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த தொற்று ஏற்பட்டதில், அம்மா உணவக பெண் ஊழியர், பஸ்நிலைய பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஊழியர், தனியார் நிதி நிறுவன ஊழியர் உள்ளிட்டோர் அடங்குவர்.

தொற்று ஏற்பட்ட நகராட்சி ஊழியர் ஏற்கனவே காய்ச்சலால் ஒரு வாரமாக விடுப்பில் இருந்துள்ளார். என்றாலும் சுகாதார பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் மற்றும் அம்மா உணவகம், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடு அமைந்துள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். அதே சமயத்தில், கொரோனா தொற்றால் பஸ்நிலைய பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, அம்மா உணவகம், ஒரு தனியார் நிதிநிறுவனம் மூடப்பட்டது.

No comments:

Post a Comment