Breaking

Monday, 22 June 2020

Curfew-violation-Marunthuvazh-Malai - சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடையை மீறி மருந்துவாழ் மலையில் திரண்டவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்


மருந்துவாழ் மலையில் திரண்டவர்களை எச்சரித்து அனுப்பிய  போலீசார்

கன்னியாகுமரி:
22-06-2020

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 5-வது கட்டமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கட்டுப்பாடுகளுக்கு பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை நீடிக்கிறது.
கன்னியாகுமரி, கொட்டாரம் அருகே மருந்துவாழ் மலை உள்ளது. இங்கு பல்வேறு அரிய வகை மூலிகைகள் உள்ளன. இங்குள்ள குகை கோவில்களில் பல சாதுக்களும், துறவிகளும் தங்கியுள்ளனர். இந்த மலைக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கன்னியாகுமரி சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் மருந்துவாழ் மலையில் திரண்டனர். இதுகுறித்து கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரேசன் வனத்துறையினருக்கும், கன்னியாகுமரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். வனக்காப்பாளர் பிரபாகரன், கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அத்துடன், ஊரடங்கு அமலில் உள்ளதால் கூட்டமாக யாரும் வரக்கூடாது என கூறி எச்சரிக்கை விடுத்து அவர்களை திருப்பி அனுப்பினர்.

இதற்கிடையே போலீசார் வருவதற்கு முன்பு ஏராளமானோர் மலை உச்சிக்கு சென்றிருந்தனர். அவர்களை போலீசார் கீழே இறங்கி வர செய்து திருப்பி அனுப்பினர். அங்கு வந்தவர்களில் பலர் முககவசம் அணியவில்லை. அவர்களுக்கு மட்டும் போலீசார் அபராதம் விதித்தனர்.

No comments:

Post a Comment