Breaking

Sunday, 28 June 2020

Corona Virus Kanyakumari - குமரியில் பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கிய கொரோனா

குமரியில் பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கிய கொரோன


நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி முதன் முதலாக 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அன்று முதல் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கொஞ்சம், கொஞ்சமாக உயர்ந்து 16 வரை வந்தது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதன்பிறகு 28 நாட்கள் குமரி மாவட்டத்தில் யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை. இதனால் குமரி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதற்கிடையேதான் வெளி நாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்துவிட வேண்டும் என்ற வேட்கையில் குடும்பம், குடும்பமாகவும், தனித்தனியாகவும் வந்தவர்கள் ஏராளமானவர்கள். அப்படி குமரிக்கு வந்தவர்கள் மூலமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் மூலமாக குமரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கும் நோய் பரவ தொடங்கியது. இப்போது குமரி மாவட்டத்திலும் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. குறிப்பாக மீனவ கிராமங்களில் பரவல் அதிகமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் யாரும் எதிர்பாராத வகையில் ஒரே நாளில் 54 பேர் நோயால் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கையானது ஒவ்வொரு நாளும் கணிசமாக உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. நோய் பரவ தொடங்கிய நாளில் இருந்து 88-வது நாளான நேற்று முன்தினம் வரை 375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் நோய் பரவல் அதிகரித்துள்ளதால் குமரி மாவட்டத்தில் தூத்தூர் உள்ளிட்ட 15 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு, கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவின்பேரில் கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் வரையில் தமிழக அரசின் கணக்குப்படி குமரி மாவட்டத்தில் 375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வயது வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, சதவீதம் பற்றிய விவரம் வருமாறு:-

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஆண் குழந்தைகள் 6 பேர் (42.86 சதவீதம்), பெண் குழந்தைகள் 8 பேர் (57.14 சதவீதம்) என மொத்தம் 14 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மொத்த சதவீதம் 3.73 ஆகும்.

6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களில் 10 சிறுவர்களும் (52.82 சதவீதம்), 7 சிறுமிகளும் (41.18 சதவீதம்) என மொத்தம் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மொத்த சதவீதம் 4.53.

13 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களில் 32 ஆண்களும் (47.76 சதவீதம்), 35 பெண்களும் (52.24 சதவீதம்) என மொத்தம் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மொத்த சதவீதம் 17.87. 26 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 144 ஆண்களும் (60 சதவீதம்), 96 பெண்களும் (40 சதவீதம்) என மொத்தம் 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மொத்த சதவீதம் 64 ஆகும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆண்கள் 26 பேரும் (70.27 சதவீதம்), பெண்கள் 11 பேரும் (29.73 சதவீதம்) என மொத்தம் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மொத்த சதவீதம் 9.87 ஆகும்.

சிறுவர், இளைஞர்கள், முதியோர் என அனைத்து வயது தரப்பிலும் மொத்தம் 218 ஆண்களும், 157 பெண்களும் என 375 பேர் ஆவர். பெண்களைவிட ஆண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட ஆண்களின் சதவீதம் 58.13, பெண்களின் சதவீதம் 41.87 ஆகும்.

No comments:

Post a Comment