Breaking

Friday, 26 June 2020

Corona Virus Kanniya Kumari - குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 29 பேருக்கு கொரோனா

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 29 பேருக்கு கொரோனா


நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனாவால் மாவட்டத்தில் 15 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு, நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் தடுப்பு பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 

களியக்காவிளை, ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடிகள்,
நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஆகியவற்றின் மூலம் நாள்தோறும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

22 பேர் பாதிப்பு

நேற்று முன்தினம் வரையில் குமரி மாவட்டத்தில் 307 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் நேற்று முன்தினம் மட்டும் 54 பேர் பாதிப்புக்கு ஆளாகியிருந்தார்கள். குமரி மாவட்டத்தில் இந்த அளவுக்கு அதிக அளவில் பாதிப்பு எண்ணிக்கை ஏற்பட்டது நேற்று முன்தினம் மட்டும்தான். அவர்களில் 147 பேர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் அனைவரும் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பினர்.

இந்தநிலையில் நேற்று 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களைப் பற்றிய விவரம் வருமாறு:-

யார்? யார்?

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், அகஸ்தீஸ்வரம் புன்னையடியைச் சேர்ந்த 4 வயது ஆண் குழந்தை, மஞ்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண், அவருடைய 1½ வயது பெண் குழந்தை, அதேபகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண், அவருடைய 55 வயது மனைவி, தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 58 வயது பெண், 46 வயது ஆண், 60 வயது பெண், 16 வயது சிறுமி, 86 வயது முதியவர், 62 வயது பெண், 62 வயது ஆண், 74 வயது மூதாட்டி, 39 வயது ஆண், 27 வயது பெண், 55 வயது பெண், 52 வயது பெண், 80 வயது முதியவர், 40 வயது ஆண், ரீத்தாபுரத்தைச் சேர்ந்த 41 வயது ஆண், பிலாவிளை கலுங்கடி பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் ஆகிய 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று நள்ளிரவில் மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 336 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்பத்திரியில் 169 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் நேற்று 8 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் ஆஸ்பத்திரியில் 168 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டிக்கெட் பரிசோதகர்

நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட 54 பேரில் கஜகஜஸ்தான் நாட்டில் இருந்து வந்த 5 பேர், சென்னையில் இருந்து வந்த 5 பேர், மதுரையில் இருந்து வந்த 12 பேர், மதுரையில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 2 பேர், தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 15 பேர், கோவையில் இருந்து வந்த ஒருவர், திருச்சியில் இருந்து வந்த 2 பேர், சின்னமுட்டத்தைச் சேர்ந்த ஒருவர், கருங்கல்லைச் சேர்ந்த ஒருவர், பூதப்பாண்டியைச் சேர்ந்த ஒருவர், நாகர்கோவிலைச் சேர்ந்த அரசு பஸ் டிக்கெட் பரிசோதகர், தக்கலையைச் சேர்ந்த ஒருவர், அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 4 பேர், ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 54 பேர் ஆவர்.

இவர்களில் மதுரையைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் ஆஸ்ராமம் பகுதிக்கு வந்திருந்தார். அவருடைய வீட்டில் நேற்று பேரூராட்சி சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்து வீட்டை பூட்டினர். அவருடைய வீட்டில் உள்ளவர்களை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். தபால்துறை ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நேற்று 2-வது நாளாக கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடந்தது.

15 இடங்கள்

இதற்கிடையே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் எவை என கணக்கெடுக்கப்பட்டு அதில் 15 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் அனைவருக்கும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது.

மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டும் என்றாலும் இ-பாஸ் பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்று முதல்-அமைச்சர் நேற்று முன்தினம் உத்தரவிட்டு இருந்தார். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளுக்கு செல்லக்கூடியவர்கள் பலர் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.


No comments:

Post a Comment