Breaking

Wednesday, 9 April 2025

சொல்லின் செல்வர் ஐயா குமரி அனந்தன் அவர்களுக்கு செந்தமிழன் சீமான் புகழ் வணக்கம்!

 சொல்லின் செல்வர் ஐயா குமரி அனந்தன் அவர்களுக்கு செந்தமிழன் சீமான் புகழ் வணக்கம்!


தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

விடுதலைப் போராட்ட வீரரின் மகனாகப் பிறந்து தமிழ்நாட்டின் மிக நீண்ட தூய அரசியல் பொதுவாழ்விற்கு உரியவரான ஐயா குமரி அனந்தன் தமது பேச்சாற்றல் மூலம் தமிழ்நாடு காங்கிரசுக்கு வாழ்வளித்த பெருந்தகை! 

கேளாதாரும் வேட்ப மொழியும் சொல்வன்மை கொண்ட ஐயா குமரி அனந்தன் அவர்கள், தமிழ் இலக்கியத்தில் கரை கண்டு, நல்லாட்சி நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது, சிந்தனைப் பண்ணையில் பாரதியார், சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன் உள்ளிட்ட 29 அருந்தமிழ் நூல்களை இயற்றிய இணையற்ற தமிழ்ப்பேரறிஞர் ! 

ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து மக்கள் தொண்டாற்றிய ஐயா அவர்கள், பனை மர பாதுகாப்பு, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் அதிகமுறை நடை பயணம் மேற்கொண்ட தனிப்பெரும் தலைவராவார்! 

பெருந்தலைவர் காமராசர் வழியில் அகில இந்திய காங்கிரசு கட்சியுடன் முரண்பட்டு, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், தொண்டர் காங்கிரஸ் ஆகிய இயக்கங்களைத் தொடங்கி வழிநடத்திய அரசியல் தீரராவார்! 

பெற்றெடுத்து பேணி வளர்த்த அன்புத்தந்தையை இழந்துவாடும் அம்மா தமிழிசை அவர்களுக்கும்,  ஐயா குமரி அனந்தன் அவர்களின் மறைவால் பெருந்துயருற்றுள்ள குடும்பத்தினர், உறவினர்கள், அரசியல் நண்பர்கள், காங்கிரசு கட்சி தொண்டர்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

நடைபயண நாயகர், 

சொல்லின் செல்வர் ஐயா குமரி அனந்தன் அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!

- செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

No comments:

Post a Comment