விடா முயற்சி
வாழ்க்கையில் கடினமான தருணத்தில் நின்று கொண்டிருக்கிறீர்களா? முயற்சி எதுவும் பலனளிக்கவில்லையா? எல்லாம் முடிந்துவிட்டது என நினைத்து வருத்தமடைகிறீர்களா? வேலையை இழந்தாலும், பெரும் பணத்தை இழந்திருந்தாலும், தொழில் முடங்கினாலும் தவறுகள் செய்து விட்டிருந்தாலும் ஒன்றை மட்டும் நினைவு படுத்திக்கொள்ளுங்கள். இன்னும் காலம் கடக்கவில்லை.
உலகத்தில் உள்ள பெரும் வெற்றியாளர்கள் யாரும் ஒரே வயதில் தங்களுடைய வெற்றியகளை அடையவில்லை. சிலர் இருபதுகளில், சிலர் அதற்கு முன்பே, சிலர் அறுபது வயதில். ஆனால் அனைவருக்கும் ஒன்றுமட்டும் பொதுவானது. அது கடின உழைப்பும், திறனைப் பெருக்கிக் கொள்ளும் சாமர்த்தியமும். ஆகவே, நம்பிக்கை கொள்ளுங்கள்.
வாழ்வில் கடினமாகப் போராடிக் கொண்டிருக்கும் உங்களைப் போலவே சாதனையாளர்களுக்கும் ஒவ்வொரு நாளும் ரணமாகத் தான் துவங்கும். படுக்கையை விட்டு எழும்போது போர்வை அவர்களை அணைத்துக்கொள்ளும்.
இன்றைய நாளை வெறுமனே ஓய்வெடுத்துக் கழித்துவிடலாம் என்று தோன்றும். இருப்பினும் அவர்கள் அந்த குரலுக்குச் செவிமடுக்காமல் அடுத்த அடியெடுத்து வைக்கிறார்கள். அதனால் சில அற்புத தருணங்களையும் அவர்கள் இழந்திருப்பார்கள். சில நண்பர்களை, காதலை, உடல்வலிமையை, மனவலிமையைக்கூட இழந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கையை இழந்திருக்கமாட்டார்கள். அதுவே அவர்களின் வெற்றிக்குக் காரணம்.
உங்கள் வாழ்வு உங்கள் கையில். அது உங்களது கட்டுப்பாட்டைவிட்டு எங்கும் போகாது. எல்லாம் முடிந்துவிட்டது என ஆன பின்னும்கூட பூஜ்ஜியத்திலிருந்து துவங்கி சாதனையாளர்களாகப் பலர் ஆகியிருக்கிறார்கள். அனைத்தும் கையைவிட்டு நழுவுவது போல உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அது உங்களது நம்பிக்கை தளர்வதால் வருவது தான்.
ஆகவே நம்பிக்கையை இருக பிடித்துக்கொள்ளுங்கள். மனம் தளராதீர்கள்.
இரா.சிவகுமார்

No comments:
Post a Comment