Breaking

Thursday, 25 June 2020

Corona Virus Kanyakumari - தக்கலை டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி



பத்மநாபபுரம்,
25-06-2020

  தக்கலை மேட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் 71 வயது டாக்டர். இவர் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். டாக்டர் தக்கலை போலீஸ் நிலையம் அருகில் ஆஸ்பத்திரியும் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக டாக்டருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதற்காக அவர் தனக்கு தானே சிகிச்சை அளித்தும் உடல்நிலை சீராகவில்லை. இதனால் அவர், தனது சளி மாதிரியை பரிசோதனைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.

நேற்று முன்தினம் கொரோனா தொற்று இருப்பதாக டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாவட்ட சுகாதார துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே டாக்டருக்கு கொரோனா உள்ள தகவல் பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தது.

அதைதொடர்ந்து பத்மநாபபுரம் நகராட்சி சுகாதார அலுவலர் ராஜாராம், வட்டார மருத்துவ அலுவலர் அஸ்வின் பிரதீப், பத்மநாபபுரம் மருத்துவ அலுவலர் லாரன்ஸ் விக்டர் ஜோ, நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், மேற்பார்வையாளர் மோகன், சுகாதார பாரத இயக்க மேற்பார்வையாளர் சோபி ஆகியோர் மேட்டுக்கடை பகுதிக்கு விரைந்து சென்று அப்பகுதி முழுவதும் சுகாதார பணியாளர்கள் மூலம் பிளிச்சீங் பவுடர் தூவுதல், கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டனர். இதையடுத்து ஆம்புலன்சு மூலம் டாக்டரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டு கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டாக்டரின் மனைவி, அவரது மருத்துவமனையில் பணியாற்றிய 2 செவிலியர்கள், ஒரு காவலாளி, வீட்டில் வேலை பார்த்த ஒரு ஆண் என 5 பேரையும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டாக்டரின் வீட்டின் பின் பகுதியில் வசித்து வரும் கணவன்-மனைவி, அவர்களின் மகன் என 3 பேரின் சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே டாக்டரின் வீடு, மருத்துவமனை ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 200 பேருக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும், கடந்த 10 நாட்களில் டாக்டரின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றவர்களின் பட்டியலையும் சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment